மதநல்லிணக்க பூக்குழி திருவிழா

எஸ்.புதூர் அருகே இந்து, முஸ்லிம் இணைந்து நடத்திய மதநல்லிணக்க பூக்குழி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
மதநல்லிணக்க பூக்குழி திருவிழா
Published on

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே இந்து, முஸ்லிம் இணைந்து நடத்திய மதநல்லிணக்க பூக்குழி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

முகரம் பண்டிகை

எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் கிராமத்தில் அஸ்ஸனா, உஸ்ஸனா, பாத்திமா நாச்சியார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பழமை மாறாமல் முகரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பூக்குழி திருவிழா, சப்பர பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முகரம் பண்டிகை திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் இந்துக்கள், முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் விரதம் மேற்கொண்டனர். தினமும் இரவில் பெண்கள் கும்மியடித்து பாட்டு பாடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இந்துக்கள், முஸ்லிம்கள் இணைந்து வழிபாடு செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியும், நிறைவு விழாவுமான பூக்குழி இறங்கும் திருவிழா நேற்று அதிகாலை நடைபெற்றது.

மதநல்லிணக்க பூக்குழி

பூக்குழி திருவிழா அன்று இந்துக்கள் விபூதி பிரசாதம் வழங்கியும், முஸ்லிம்கள் சர்க்கரை பாத்தியா செய்தும் வழிபட்டு சென்றனர். ஆண் பக்தர்கள் விரதமிருந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மதநல்லிணக்க பூக்குழியில் 3 முறை இறங்கி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.

பெண்கள் பூ மொழுகுதல் எனும் நிகழ்ச்சியில் தலையில் துணியை போர்த்தியபடி, நெருப்பு கங்குகளை தலையில் கொட்டி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மின்னொளி அலங்கார சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட அஸ்ஸனா, உஸ்ஸனா, பாத்திமா நாச்சியாரின் உருவங்கள் வாணவேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com