அடையாற்றில் புனரமைப்பு பணி கனமழை பெய்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது - சென்னை புறநகர் பகுதி பொதுமக்கள் நம்பிக்கை

அடையாறு ஆறு புனரமைப்பு பணிகளால் கனமழை பெய்தாலும் இந்த ஆண்டு சென்னை புறநகர் பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்படாது என பொதுமக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அடையாற்றில் புனரமைப்பு பணி கனமழை பெய்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது - சென்னை புறநகர் பகுதி பொதுமக்கள் நம்பிக்கை
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர் பகுதியில் இருந்து தொடங்கும் அடையாறு ஆறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், பெருங்களத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அனகாபுத்தூர், பொழிச்சலூர், மணப்பாக்கம் வழியாக 46 கி.மீ.தூரம் பயணித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலில் கலக்கிறது.

ஒவ்வொரு பருவ மழை காலத்தின்போதும் அடையாறு ஆற்றில் ஏற்படும் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதந்து வந்தன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மழைக்காலம் முடியும்வரை அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் அடையாறு ஆற்றை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மண்ணிவாக்கம் பகுதியில் இருந்து தர்காஸ் பகுதி வரை ரூ.70 கோடியில் அடையாறு ஆறு புனரமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மழை காலத்தின் போதும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீரானது சோமங்கலம் ஏரி வழியாக அடையாறு ஆற்றில் கலந்து பெருவெள்ளம் ஏற்பட்டு வரதராஜபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், முடிச்சூர் ஊராட்சி பகுதியில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சோமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை நேரடியாக அடையாறு ஆற்றுக்கு கொண்டுவரும் வகையில் 1,992 மீட்டர் தூரத்துக்கு ரூ.30 கோடியில் கான்கிரீட் மூடுகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சோமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது இந்த மூடு கால்வாய் வழியாக வெளிவட்ட சாலையை கடந்து அடையாறு ஆற்றில் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் சோமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது அடையாறு ஆற்றில் நேரடியாக கலந்து விடுவதால் வரதராஜபுரம், முடிச்சூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்குவது தடுக்கப்பட்டுள்ளது.

அடையாறு ஆற்றில் சராசரியாக 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும்பாதே கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் அடையாறு ஆற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. அதன்படி தற்போது அடையாறு ஆற்றின் கரைகள் 4 மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 10 மீட்டர் முதல் 60 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடுவதற்கு காரணமாக இருந்த ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் கான்கிரீட் தாங்கு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அடையாறு ஆற்றில் 15 ஆயிரம் கன அடி நீர் செல்லும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் ஆடையாறு ஆற்றின் கரையோர குடியிருப்பு பகுதிகளுக்கு பருவ மழை காலங்களில் ஏற்பட்டு வந்த வெள்ள அபாயம் நீங்கியுள்ளது.

இந்த ஆண்டு கனமழை பெய்தாலும் குடியிருப்பு பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அடையாறு ஆற்றில் இன்னும் சில பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கான்கிரீட் தாங்கு சுவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டியது உள்ளது. மழை காலம் முடிந்த பிறகு அந்த பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

அடையாறு ஆறு புனரமைக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கையில் அந்த பகுதி மக்கள் உள்ளனர்.

இதேபோல தாம்பரத்தை சுற்றியுள்ள முடிச்சூர் ஏரி, இரும்புலியூர் ஏரி, பெருங்களத்தூர் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீரை கான்கிரீட் மூடு கால்வாய் மூலம் நேரடியாக அடையாறு ஆற்றுக்கு கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றினால் இந்த பகுதி முழுவதும் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும். அதற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com