ஊரப்பாக்கத்தில் ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை

ஊரப்பாக்கத்தில் ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை பொதுப்பணித்துறையினர் மீட்டனர்.
ஊரப்பாக்கத்தில் ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை
Published on

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் போது செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாமல் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மழைக்காலங்களில் பாதிப்படைகின்றனர். எனவே இதற்கு முக்கிய காரணம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஊரப்பாக்கம் பெரிய ஏரிக்கரையை ஒட்டியுள்ள அடையாறு கால்வாய்க்கு செல்லும் ஓடைக்கால்வாய் முழுவதும் ஆக்கிரமித்து 15 வீடுகள் கட்டப்பட்டு இருப்பது என்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஏரிக்கரை அருகே உள்ள ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 15 வீடுகளை உடனடியாக அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குஜராஜ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊரப்பாக்கம் ஏரிக்கரை ஓடை கால்வாய் ஆக்கிரமிப்பு செய்த பகுதிக்கு 3 ராட்சத பொக்லைன் ஏந்திரங்களுடன் சென்று ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 15 வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகளை மீட்டனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:- ஊரப்பாக்கம் பெரிய ஏரிக்கரையை ஒட்டி செல்லும் ஓடை கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடியாகும். மீட்கப்பட்ட ஓடை கால்வாய் இரு புறமும் கரையமைத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும். இதனால் வட கிழக்கு பருவமழை காலங்களில் இந்த ஓடை கால்வாய் வழியாக வெள்ளம் ஆதனூர் அடையாறு கால்வாயில் சென்று கலக்கும் இனி வரும் காலங்களில் இந்த ஓடை பகுதியை யாராவது ஆக்கிரமித்து வீடுகள் கட்டினால் சட்டப்படி ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்கிரமிப்பு அகற்றுவதையொட்டி கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் கமிஷனர் சிங்காரவேலு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com