ரெட் அலர்ட்: கோவை, நீலகிரிக்கு விரைந்த பேரிடர் மீட்புப்படை

கோப்புப்படம்
கோயம்புத்தூர், நீலகிரிக்கு மாநில பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழகத்தில் நாளை மறுநாள் (25-ந்தேதி) மற்றும் 26-ந்தேதி அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசனை நடத்தியுள்ளது. தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரிக்கு மாநில பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.