

சென்னை
சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையில், செல்போன்களில் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவை தராத நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பொழிகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று சென்னையில் 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ள நிலையில் இன்றும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) பொதுமக்களுக்கு எஸ்.ஓ.எஸ். (SOS) மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, செல்போன்களில் எச்சரிக்கைக்கான அலறல் சத்தமும் கேட்டது.
அதில், சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் முன்பே வேண்டிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ளவும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.