தவெக-வில் இணைந்த கையோடு சீட் வாங்கிய ரெட்டியார்பட்டி நாராயணன்

கடந்த 2019ல் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் நாராயணன்.
தவெக-வில் இணைந்த கையோடு சீட் வாங்கிய ரெட்டியார்பட்டி நாராயணன்
Published on

சென்னை,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு மொத்தம் 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம், பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில், நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏவான நாராயணன் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ நாராயணன், நாங்குநேரியில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த சூழலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் கடுமையாக அப்செட் ஆனார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

ரெட்டியார்பட்டி நாராயணன் 1986-ல் அதிமுகவில் இணைந்து தொடர்ந்து அந்தக் கட்சியிலேயே இருந்து வந்தவர். ஜெயலலிதா முதல்-அமைச்சரான 1991-ல் இருந்து 1996 வரை கிளைச் செயலாளர், 1996-ல் ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர், 2004-ல் நாடாளுமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை தேர்தல் பணிக்குழு உறுப்பினர், 2009 நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பணிக்குழு உறுப்பினர், அதன்பிறகு 2009-ல் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் மற்றும் 2011-ல் புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஆரம்பத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர். கடந்த 2019ல் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் நாராயணன்.

இந்த நிலையில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தார்.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர் நாங்குநேரி முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன். மேலும் இன்று தவெக வெளியிட்டுள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில், நாங்குநேரி தொகுதி வேட்பாளராக நாராயணன் பெயர் இடம் பெற்றுள்ளது.

நாங்குநேரி தொகுதியில் நாராயணன் ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக பணியாற்றிய அனுபவம் மற்றும் பிரபலமானவராக இருப்பதால் அங்கு தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com