‘கஜா’ புயல் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

‘கஜா’ புயல் பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
‘கஜா’ புயல் பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், வரும் 15-ந் தேதி அதிகாலையில் சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் எச்சரிக்கை வட தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளும், புயலுக்கு முன்னும், பின்னும் அரசின் அலட்சியத்தால் ஏராளமான மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழக்க நேரிட்டதும் தமிழக வரலாற்றின் கருப்பு பக்கங்கள் ஆகும். புயலையும், மழையையும் திறம்பட சமாளிக்க முடியாத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது என்பதால் புயல் ஆபத்து நீங்கும் வரை, மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்கும் பயணிகளின் மனநிலையில் தான் மக்கள் இருக்கின்றனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு எந்த முன்னெச்சரிக்கைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முதல் முன்னெச்சரிக்கை பணியாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படைகளை நிறுத்த வேண்டும்.

வடமாவட்டங்களில் ஒன்றியத்துக்கு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் நியமித்து எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு சேதத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். புயல் தாக்கிய பின் பாதிப்புகளை சரிசெய்வதைவிட, முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுப்பது தான் சிறந்தது என்பதால், அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதன்மூலம் கஜா புயலால் தமிழகத்துக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை இயன்றவரை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com