

சென்னை,
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மதுவை முற்றிலும் தவிர்த்து உடல்நலத்தைப் பேணவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்னும் இரண்டு தினங்களில் தீபாவளிப் பண்டிகை தொடங்க இருக்கிறது. மழை இல்லையெனில், இன்று மாலையே பட்டாசு வெடி சத்தம் கேட்க ஆரம்பித்துவிடும். ஐம்பது வருடங்களுக்கு முன்பு நகர்ப்புறங்களிலும் வசதியானவர்கள் மத்தியில் மட்டும் கொண்டாடப்பட்ட தீபாவளி, இப்பொழுது கிராமங்களுக்கும் பரவி அனைத்து தரப்பினரும் கொண்டாடக்கூடிய விழாவாகப் பரிணமித்துவிட்டது. தீபாவளித் திருநாளுக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைச் சொன்னாலும், இப்பொழுது அதுகுறித்து ஆய்வுக்கு நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை.
தீபாவளி என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்களுடைய மிகப்பெரிய விழாவாகும். பல பகுதிகளில் இந்துக்கள் என்ற அந்த எல்லைக்கோட்டையும் தாண்டி ‘இந்தியர்’ என்ற ஒற்றை அடையாளத்தில் பிற மதத்தினரும் கொண்டாடும் சூழல் உருவாகி வருவது சிறப்பானதாகும். இந்த தீபாவளித் திருநாளில் உலகெங்கும் வாழக்கூடிய இந்திய மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில், தீபாவளியை கொண்டாட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் பல குடும்பங்கள் கடன் வாங்கி குழந்தைகளுக்குப் புத்தாடை வாங்கித் கொடுத்து, அந்த ஒரு நாளைக் கடத்திய வரலாறுகள் உண்டு. இப்பொழுது பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, புத்தாடை அணிவது என்பதை எல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயம் தீபாவளி அன்று நடந்தேறுகிறது.
ஒருவர் பணிக்காக எந்தப் பகுதியில் இருந்தாலும் அந்தப் பணிகளை எல்லாம் விட்டுவிட்டு, ஊர் நோக்கி இல்லம் நோக்கி வந்து குடும்ப உறுப்பினர்களோடு, உற்றார் உறவினர்களோடு இரண்டு மூன்று நாள் சேர்ந்து வாழும் ஒரு சமூகச் சூழல் அதிகரித்துள்ளது. ஆனால், அடுத்த வீட்டுக்காரர் 10,000 ரூபாய்க்குப் பட்டாசு வாங்குகிறார்கள்; கடன்பட்டாவது நாம் 15,000 ரூபாய்க்குப் பட்டாசு வாங்க வேண்டும் என்ற உணர்வுகளோ, வேறு அவசியமற்ற ஊதாரித்தனமான செலவுகளோ செய்யவும் முயற்சி எடுக்கக்கூடாது.
மேலும், பட்டாசு வெடிப்பது என்பது அல்ல தீபாவளியினுடைய நோக்கம். ’வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளி பிறக்க வேண்டும்’ என்பதைச் சுட்டிக்காட்டக் கூடியதே தீப ஒளித் திருநாளாகும். தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மண் அகல் விளக்குகளில் குடும்பத்தோடு சேர்ந்து தீபம் ஏற்றினாலே, அதைவிடக் குதுகலமாக வேறு எதுவும் இருக்க முடியாது.
ஒரு காலத்தில் கிராமங்களில் ஓலைப்பட்டாசுகளும் மத்தாப்புகளும்தான் தீபாவளியினுடைய அடையாளங்களாக இருந்தன. அவைகள் ஆபத்து இல்லாதவைகள், அதிகமாகச் செலவினங்கள் இல்லாதவைகள். வீண் பெருமைக்காகக் காற்றை மாசுபடுத்துகின்ற, கைகளில் உடம்பில் காயப்படுத்துகின்ற ஆபத்தான வண்ண வண்ண வெடிகள் வெடிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, இளைஞர்களும், நடுத்தர வயதினரும், முதியோர்களும் தீபாவளி என்றாலே பாட்டில் பாட்டிலாக டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்கி வைத்துக் கொண்டு மூன்று நாள், நான்கு நாள் குடித்து உணர்வற்றுக் கிடப்பதை மகிழ்ச்சியென்றோ பெருமை என்றோ கருதக்கூடாது. நாளுக்கு நாள் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தப்படுகிறது; புவி வெப்பம் அதிகமாகிறது; இயற்கைச் சூழல்கள் மாற்றமடைந்து மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்துவதில்லை; அவசியமற்ற நேரத்தில் அதிகம் பெய்துவிடுகிறது. எனவே, இந்த தீபாவளித் திருநாளில் வெடி (பட்டாசு) வெடிப்பதைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், குடியை (மதுவை) அறவே தவிர்த்து உடல் நலத்தைப் பேணவும் வேண்டுகிறேன்; வாழ்த்துகிறேன். இதுவே அனைத்து மக்களுக்குமான தீபாவளி வாழ்த்துகளும், நற்செய்தியுமாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.