

சென்னை,
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகள் தெற்கு ரெயில்வே மூலம் சீரமைக்கும் பணி கடந்த 20-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட இருப்பதாக முந்தைய நாளான 19-ந் தேதி அன்று திடீரென அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக முறையான அறிவிப்பு தெற்கு ரெயில்வேயிடமிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்படவில்லை.
இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தெற்கு ரெயில்வேயை தொடர்பு கொண்ட பின்னரே மின்னஞ்சல் மூலம் விவரங்கள் பெறப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பில் கூட்ட நெரிசல் நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு புறநகர் மின்சார ரெயில் சேவை என்பது 20 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும் என்ற நேர அட்டவணை மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நடைமுறையில் 30 நிமிட இடைவெளியில் மட்டுமே புறநகர் மின்சார ரெயில் சேவை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த குறைக்கப்பட்ட நேர அட்டவணை 20.02.2026 முதல் 05.04.2026 வரை கடைபிடிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் ஆண்டு இறுதி தேர்வு மற்றும் பருவத்தேர்வுகள் ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் எவ்வித ஆலோசனையும் இன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளாமல் எழும்பூர் ரெயில் நிலைய சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளினால் மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்விற்கான பயிற்சி மேற்கொள்ளவோ தேர்வினை உரித்த நேரத்தில் எழுதுவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.
இருப்பினும், சென்னை மாநகரின் போக்குவரத்து தேவையினை பூர்த்தி செய்வதற்காக மாநகர் போக்குவரத்துக்கழகம் மூலம் ஏற்கனவே தடத்தில் இயக்கப்பட்டு வரும் 314 சேவைகளுடன் கூடுதலாக 60 சிறப்பு பஸ்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. மேலும் இந்த கூடுதல் இணைப்பு பஸ் சேவைகளின் மூலம், எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தலைமைச்செயலகம், எழிலகம், சென்ட்ரல், அரசு பொதுமருத்துவமனை, ஐகோர்ட்டு மற்றும் சென்னை கடற்கரை ரெயில்நிலையம் முதலிய இடங்களுக்கு பயணிகள் தங்களது வேலை நிமித்தமாக பயணத் தேவையினை பூர்த்தி செய்யும் விதமாக திட்டமிட்டு இயக்கப்படுகிறது.
சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து பாதிப்பை 20-ந் தேதி அன்றே மாநில அரசு கணித்து கூடுதல் பஸ்களை மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு ஓரளவு நிலைமை சீர் செய்யப்பட்டது. முன்னதாகவே தெற்கு ரெயில்வே மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உரிய தகவல் அளித்திருந்தால் மற்றும் உரிய ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு இருந்தால் பயணிகள் பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை கலந்தாலோசிக்கப்பட்டு எடுத்திருக்கலாம்.
புறநகர் ரெயில் சேவைகள் இயக்கம் குறைக்கப்பட்ட தகவல் வெளியான உடன் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. இதன் பின்னர் தான் தெற்கு ரெயில்வே விழித்துக்கொண்டு 24-ந் தேதி (நேற்று) முதல் செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களிலிருந்து பரங்கிமலை மற்றும் எழும்பூர் வரை குறுகிய தூர இடங்களுக்கு புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு புறநகர் மின்சார ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில் இருந்து தேவையான அளவு மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுவதால் ஒரே இடத்தில் பயணிகள் கூடி சிரமம் ஏற்படாத வண்ணம் உடனுக்குடன் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரித்த நேரத்தில் செல்கின்றனர்.
புறநகர் ரெயில் பயணிகள் 3 மாத காலத்திற்கான மாதாந்திர பயண அட்டை பெற்றுள்ளதால் கூடுதல் பஸ்களில் உரிய பயணச்சீட்டு கட்டணம் செலுத்தி தங்களது இடங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இருப்பினும், மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து தேவையினை அறிந்து சிறப்பான சேவையை எந்தவொரு இக்கட்டான காலங்களிலும் நாள்தோறும் வழங்கி வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இதுகுறித்து விவரங்கள் கேட்டறிந்து வருகிறார்கள். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் பயணிக்க ஏற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.