தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பை பொறுத்து மையங்கள் குறைப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பை பொறுத்து தடுப்பூசி மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பை பொறுத்து மையங்கள் குறைப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Published on

ஜீரோ டிலே வார்டு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கூடுதலாக 136 படுக்கை வசதிகள் கொண்ட ஜீரோ டிலே வார்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த ஒருவார காலமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதை பத்திரிகை செய்திகளின் வாயிலாக அறிந்த முதல்-அமைச்சர், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்க அறிவுறுத்தினார். அதன்படி ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 72 ஆக்சிஜன் வசதியுடன்

அமைக்கப்பட்ட படுக்கைகளுடன், தற்போது கூடுதலாக 136 படுக்கைகள் ஜீரோ டிலே வார்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து தற்போது இந்த ஆஸ்பத்திரியில் மொத்தம் 2 ஆயிரத்து 50 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன.

77 லட்சம் தடுப்பூசிகள்

எனவே, இனி சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகள் வாகனங்களில் காத்திருக்க வேண்டியிராது. அதேபோல இங்கு உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை குறித்த தகவலை டிஜிட்டல் பலகையில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்கும் விதமாக பார்வையாளர்களுக்கு கொரோனா வார்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கூடுதலாக டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நோயாளிகளை கவனித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 77 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. 70 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி மையங்கள் குறைப்பு

தமிழகத்துக்கு 3.5 கோடி தடுப்பூசிகள் பெற சர்வதேச டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசிகள் வந்தபிறகு மேலும் பல புதிய வசதிகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். தற்போது தடுப்பூசிகள் கையிருப்பை பொறுத்தே தடுப்பூசி மையங்களும் குறைக்கப்பட்டுள்ளன. 18 முதல் 44 வயது வரை உடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, இதுவரை 11 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் 400 டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது. 470 டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. ரூர்கேலா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும், ரெயில்கள், விமானங்கள், கடல் வழியாகவும் 140 டன் ஆக்சிஜன் வந்து கொண்டிருக்கிறது. அதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com