"இடைநிற்றல் காரணமாக மாணவர்களின் சான்றுகளை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல" - மதுரை ஐகோர்ட் கிளை

உதவித்தொகையை திரும்ப பெற வேண்டும் என்றால் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
"இடைநிற்றல் காரணமாக மாணவர்களின் சான்றுகளை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல" - மதுரை ஐகோர்ட் கிளை
Published on

மதுரை,

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் அளித்த மனுவில், விருதுநகரில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தாகவும், சூழ்நிலை காரணமாக இடையிலேயே படிப்பை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கல்லூரியில் சேரும் போது கொடுத்த 10, 12-ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை திரும்ப கேட்ட போது, அவற்றை கொடுக்க கல்லூரி நிர்வாகம் மறுத்து விட்டதாகவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவி சாதி வாரியான இடஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்து, அதற்கான கல்வி உதவித்தொகையை பெற்றுள்ளார் எனவும், இடைநிற்றல் ஏற்பட்ட பின்னர் அந்த உதவித்தொகையை திருப்பி ஒப்படைக்காததால் சான்றிதழ்களை கொடுக்கவில்லை என்றும் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மாணவி கல்வி உதவித்தொகை பெற்ற பின்பு இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட உதவித்தொகையை திரும்ப பெற வேண்டும் என்றால் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அதை விடுத்து மாணவியின் சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல. கல்விச் சான்றிதழ் விற்பனைக்கு அல்ல. எனவே மாணவியின் சான்றிதழ்களை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com