உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

கீழக்கரையில் தற்கொலை செய்து கொண்ட ஜவுளி வியாபாரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா
Published on

கீழக்கரை, 

ஜவுளி வியாபாரி தற்கொலை

கீழக்கரை அலைவாய்கரைவாடியை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி சிவமுனி(வயது 38). இவர் தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று முன்தினம் கீழக்கரை ஜெட்டி பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அவரது ஜவுளி கடையில் இருந்து கடிதம் ஒன்று எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமல் அலைக்கழிப்பு செய்ததாகவும், தனது சாவுக்கு காரணம் என்று குறிப்பிட்ட நபர்கள் பெயரையும் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உடலை வாங்க மறுத்து தர்ணா

அந்த கடிதத்தை எடுத்து கொண்டு சிவமுனியின் உறவினர்கள் கீழக்கரை போலீஸ் நிலையத்திற்கு சென்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினர். அதற்கு கையெழுத்து நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்த பின்பே இது குறித்து வழக்குப்பதிவு செய்ய முடியும் என போலீசார் கூறினா. இதையடுத்து சிவமுனியின் உறவினர்கள் அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி கீழக்கரை அரசு ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கி சென்று அடக்கம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com