

சென்னை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
மாநில அரசுகள் செய்துவரும் நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறார். தமிழகத்திலும் கொரோனா நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் நடத்திய ஆலோசனையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து எடுத்துரைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நேரத்திலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் ஈடுபாடு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
பிரதமர் நரேந்திரமோடியை தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து கேட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
துணை ஜனாதிபதி இன்று (நேற்று) காலை 11 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை பாராட்டி, இப்பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.