

சென்னை,
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது. மேடைகளில் அ.தி.மு.க. அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு, மக்களை திசை திருப்பி, வெற்றியும் பெற்றுவிட்டனர்.
நான், கடந்த மாதம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், கவர்னர் உரையின் மீது பேசும்போது கூட, நீட் தேர்விற்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன். ஆனால், அதற்கு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் நேரடியாக எந்த பதிலும் தரவில்லை.
நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தனர். ஐகோர்ட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ இன்றே இந்த அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டது போல, மு.க.ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில், ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும்; அதற்கான வழி எங்களுக்கு தெரியும் என்றும் வாய் வீரம் காட்டிய மு.க.ஸ்டாலின் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக என் மீது பழி சுமத்தியுள்ளார். பாதம் தாங்கிகள், எதிர்க்கட்சியான பிறகும் பா.ஜ.க.வின் அடிமைகள் என்றெல்லாம் அரசியல் நாகரிகம் இன்றி அறிக்கை என்ற பெயரில் நஞ்சை கக்கி இருக்கிறார்.
1999, 2004 காலக்கட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசில் பங்குகொண்டு, 5 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்து, 2001-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 26 இடங்களை அள்ளி வழங்கி குலாவிய போதும், இவர்கள் எதை தாங்கி கொண்டிருந்தார்கள் என்று திருப்பி கேட்க எங்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது. ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நாங்கள், அநாகரிகமாக நடந்துகொள்ள மாட்டோம்.
இன்றைய தி.மு.க. ஆட்சியாளர்களை போல், எந்த வாக்குறுதியை வேண்டுமென்றாலும் அள்ளி வீசலாம், மக்களை ஏமாற்றலாம், அதிகாரம் கைக்கு வந்தபின் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம், 5 ஆண்டுகளுக்கு நம்மை யாரும், எந்த கேள்வியும் கேட்க முடியாது என்ற மமதை குணம் கொண்டுள்ளது போல் நாங்கள் செயல்படுவதில்லை.
முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி, நீட் ஒழிந்து விடும் என்று தேர்விற்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், செப்டம்பர் மாதம் 12-ந்தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அவர்களின் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிவந்த நாங்களும் நீதிக்கு தலைவணங்கக் கூடியவர்கள்; சட்டத்தை மதிப்பவர்கள்; எத்தகைய சூழ்நிலை வந்தாலும் மக்கள் நலனுக்காக சட்டப் போராட்டம் நடத்தியவர்கள்; தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள வறிய மாணவர்களின் நலனுக்காக நீட் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள்; நாங்கள்.
ஆட்சியில் இருந்தவரை நீதியை நம்பி, தலை முதல் பாதம் வரை போராடியவர்கள். இன்றைய தி.மு.க. ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.