தமிழகத்தின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது
Published on

சென்னை

தமிழகத்தில் 1995-1996-ம் ஆண்டு கால இறுதியில் நிதி நிலைமை நன்றாக இருந்தது. அப்போது, அரசிடம் ரூ.649 கோடி நிதி ரொக்கமாக இருப்பு இருந்தது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் நிதி நிலைமை மோசமடைய தொடங்கியது.

2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்து இறங்கியபோது, கடன் அளவு ரூ.34,540 கோடியாக இருந்தது. அதே ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று, நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையையும் வெளியிட்டது.

2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி முடிவடையும்போது, கடன் அளவு ரூ.63,848 கோடியாக அதிகரித்தது. அடுத்து, 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவடையும்போது, கடன் அளவு 1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு, 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக கூடியது.

2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்த நிலையில், 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் கடன் அளவு 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், இடைக்கால பட்ஜெட்டை அ.தி.மு.க. தாக்கல் செய்தபோது, தமிழகத்தின் கடன் அளவு ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்றும் அப்போதே தெரிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் கடன் அளவு 1,305 சதவீதம் அதிகரித்துள்ளது. மடங்கில் கணக்கிடும்போது 13 மடங்கு உயர்ந்திருக்கிறது.

தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பால் அரசுக்கு வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, கடன் அளவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க., முதலில் அரசின் நிதி நிலையை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தது. அப்போதே, விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கவர்னர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை. இந்த நிலையில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு 2001-ம் ஆண்டு வெள்ளை அறிக்கையானது, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை பொது வெளியில் பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடப்பட்டு உள்ளது.

வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்காக தலைமைச் செயலகம் வந்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அங்கு 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

முழு வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்வதை அடையாளப்படுத்துவதே வெள்ளை அறிக்கை என்பது.தமிழகத்தின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com