

சென்னை,
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அதே ஆண்டு நவம்பர் 17-ந்தேதிக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
நிபந்தனையற்ற மன்னிப்பு
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், வார்டு மறுவரையறை பணிகள் கடந்த ஆகஸ்டு மாதம் முடிக்கப்பட்டு, வார்டு மறுவரையறை ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது. அந்த பரிந்துரைகள் ஆய்வில் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் வரும் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும். அதன் பின் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், நீதிமன்ற அவமதிப்பில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
முரணான நிலைப்பாடு
இதையடுத்து நீதிபதிகள், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாததால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என்று ஐகோர்ட்டில் தெரிவித்து விட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக இரண்டு விதமாக முன்னுக்குப்பின் முரணான நிலைப்பாட்டை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏன் எடுத்துள்ளது? என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், விசாரணையை வருகிற நவம்பர் 8-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.