பொதுமக்களுக்கு வழங்கும் நிவாரண உதவிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பொதுமக்களுக்கு வழங்கும் நிவாரண உதவிகள் குறித்து தி.மு.க. எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பொதுமக்களுக்கு வழங்கும் நிவாரண உதவிகள் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

கொரோனா நோய் பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, தி.மு.க. நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், நேற்று காலை 10 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்தபடி, பொதுமக்களுக்கு வழங்கும் நிவாரண உதவிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் உள்ள தி.மு.க. எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 250 பேர் தங்களது இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்தபடி கலந்து கொண்டனர். மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தின்போது, 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது, தங்கள் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்குதல் எந்த அளவில் உள்ளது. மக்களுக்கு தி.மு.க. சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகள் என்ன?. நிவாரண உதவிகள் வழங்கும் போது என்னென்ன இடர்பாடுகள் வருகின்றன?. இது தொடர்பாக, ஐகோர்ட்டு வழங்கியுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றி நிவாரண உதவிகளை தொடர வேண்டும். மேற்கொண்டு இன்னல்கள் வந்தால் கட்சித் தலைமைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில், நிவாரண உதவிகள் வழங்கச் செல்லும் நிர்வாகிகள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல மாவட்ட செயலாளர்கள், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும்போது ஆளுங்கட்சியினர் இடையூறு செய்வதாக மு.க.ஸ்டாலினிடம் புகார் செய்தனர். அதற்கு அவர், இந்த பிரச்சினைக்காகத்தான் சென்னை ஐகோர்ட்டில் நாம் ஒரு வழக்கை தொடர்ந்து, தீர்ப்பை பெற்றிருக்கிறோம். அந்த தீர்ப்பின்படி, நிவாரண உதவிகள் வழங்குபவர்கள், 48 மணி நேரத்திற்கு முன்பாக தகவல் தெரிவித்தால் போதும். எனவே, அந்த நடைமுறையை முறையாக பின்பற்றுங்கள் என்று கூறி நிர்வாகிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com