

திருச்சி,
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 54 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.
ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க ரிக் இயந்திரத்தால் இதுவரை 35 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் சுமார் 88 அடி ஆழத்தில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்த நிலையில் குழி தோண்டும் பணியை அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறும் இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்து வருகிறார். குழந்தையின் மீட்புப்பணிகள் குறித்து துணை முதல்வரிடம் அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.