

சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவர் இன்று காலை அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம் மற்றும் பெரியார் நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சிமாற்றம் இன்னும் 2 மாதங்களில் ஏற்படப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மு.க.ஸ்டாலின், எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. வரும் 7-ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க உள்ளேன். 10 ஆண்டுக்குள் ஒவ்வொரு துறையும் அடைய வேண்டிய இலக்கை நான் வரையறுத்து இருக்கிறேன். மூத்த நிர்வாகிகள், நடுநிலையாளர்கள், பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடலில் இது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து திமுக என்றும் பின்வாங்காது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சிமாற்றம் இன்னும் 2 மாதத்தில் ஏற்பட உள்ளது. திமுக குறித்து மோடி பேசினார். நேற்று அமித் ஷா பேசினார். இனிமே பாஜகவில் இருந்து வரக்கூடிய அனைவரும் அது தான் பேசுவார்கள். ஊழலில் திளைத்து கொண்டிருக்கிற அதிமுக அரசு ஊழல் செய்ய யார் துணை நிற்கிறார்கள் என்பது நாட்டுக்கு தெரியும் என்று அவர் கூறினார்.