

வடகிழக்கு பருவமழை
தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், தற்போது அது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து விலகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 4 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
கனமழைக்கு வாய்ப்பு
அதன்படி, இன்று புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அனேக இடங்களில் மிதமான மழை
நாளை மறுதினமும் (புதன்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்கள், கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஏற்காடு 10 செ.மீ., திருமூர்த்தி அணை 9 செ.மீ., பந்தலூர் 8 செ.மீ., பெரியார், சின்னக்கல்லாறு, கலசப்பாக்கம் தலா 7 செ.மீ., திருவண்ணாமலை, அமராவதி அணை தலா 6 செ.மீ., தாராபுரம், கீழ்பென்னாத்தூர், கொடைக்கானல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், மலையூர், ஹாரிசன் எஸ்டேட் தலா 5 செ.மீ.' உள்பட பல இடங்களில் மழை பெய்தது.