சார்பதிவாளர் அலுவலகங்கள் நவம்பர் 1-ந்தேதி முதல் வார நாட்களில் மட்டுமே இயங்கும் - சனிக்கிழமை கட்டாயப்பணி ரத்து

சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நவம்பர் 1-ந்தேதி முதல் வார நாட்களில் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்கள் நவம்பர் 1-ந்தேதி முதல் வார நாட்களில் மட்டுமே இயங்கும் - சனிக்கிழமை கட்டாயப்பணி ரத்து
Published on: 

சென்னை,

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

“கடந்த 2022-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவும், அந்த அலுவலகங்களில் அதன் வேலைப்பளுவுக்கு தகுந்தவாறு தேவையான பணியாளர்கள் பணியாற்ற சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்களுக்கு உத்தரவிடவும் பதிவுத்துறை தலைவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

கடந்த இந்நிலையில், செப்டம்பர் 8-ந்தேதி தமிழக அரசுக்கு பதிவுத்துறை தலைவர் எழுதிய கடிதத்தில், "எங்கிருந்தும் பதிவு என்ற குறிக் கோளை எய்தும் வகையில், சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு மட்டுமின்றி பல்வேறு கூடுதல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆவணப்பதிவு காரணமாக சனிக்கிழமைகளில் அலுவலகப்பணிகளில் பின்னடைவு ஏற்படுகிறது. வரும் காலங்களில் அனைத்து ஆவணங்களும் வருகையில்லா பதிவு, காகிதமில்ல முறையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப்பணி என்பதை கைவிடலாம் என்ற சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை நவம்பர் 1-ந்தேதி முதல் செயல்படுத்தலாம். இதற்காக 2022-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இதைப் பரிசீலித்த தமிழக அரசு, பதிவுத்துறை தலைவரின் கருத்துகளை ஏற்று, சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் நவம்பர் 1-ந்தேதி முதல் வார நாட்களில் மட்டுமே செயல்படும். சனிக்கிழமை கட்டாயப்பணி முறையை கைவிட முடிவெடுத்து உத்தரவிடப்படுகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com