சென்னை ஐஐடி இணையதளத்தை முடக்கிய மாணவர்.. காரணம் என்ன தெரியுமா..?

ஐஐஐ-யின் சர்வர்கள், தரவுத்தளங்கள், பணம் செலுத்தும் முறைகள், விண்ணப்பதாரரின் தகவல்கள் மற்றும் பிற முக்கியமான தரவுகளை தன்னால் அணுக முடிந்ததாக அந்த நபர் கூறியிருந்தார்.
இணையதளம் முடக்கம்
இணைதளம் முடக்கம்
Published on

சென்னை ஐஐடி இணையதளப் பக்கம் அண்மையில் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவின் முதல் செயல்முறை சார்ந்த 'இளநிலை சைபர் செக்யூரிட்டி’ என்ற பட்டப்படிப்பை 2026-27 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த நபர் ஒருவர், மாணவர் சேர்க்கைக்கான தகுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த விண்ணப்பதாரர், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தனது சைபர் செக்யூரிட்டி திறமையை நிரூபிக்கவும், சென்னை ஐஐடி இணையதளப் பக்கத்தில் ஊடுருவி முடக்கியிருக்கிறார்.

நோக்கம் என்ன?

சென்னை ஐஐடியின் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இணையப் பக்கத்தை (Student/Staff Services Portal) முடக்கிய அந்த நபர், ‘எனக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கும் நோக்கம் இல்லை... எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே" என்ற செய்தியை பகிர்ந்துள்ளார்.

சைபர் பாதுகாப்பு ஆர்வலர் என்று கூறப்படும் அந்த நபர், நியாயமற்ற சேர்க்கை செயல்முறை தொடர்பாக அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறியுள்ளார். அவரது மெசேஜ் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ரெட்டிட்டில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

அதில் நபர் சென்னை ஐஐடி-யில் சைபர் பாதுகாப்பில் இளங்கலை அறிவியல் (BCyber) பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியும், தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தும், தனது சைபர் பாதுகாப்புப் பணிகளை வெளிப்படுத்தியிருந்தும், தேர்வு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இணையதளம் முடக்கம்
இணையதளம் முடக்கம்

பாதுகாப்பு குறைபாடுகள்

சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி-யில் உள்ள நிர்வாக சர்வர்கள், தரவுத்தளங்கள், பணம் செலுத்தும் முறைகள், விண்ணப்பதாரரின் தகவல்கள் மற்றும் பிற முக்கியமான தரவுகளை தன்னால் அணுக முடிந்ததாக கூறியிருந்தார். ஆனால் அவர் கூறிய இந்த தகவல் உண்மைதானா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

கான்பூர் ஐஐடி இணையதளத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பலமுறை தெரிவித்ததாகவும், தனது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரியதாகவும், ஆனால் தனது மின்னஞ்சல்களுக்குப் பதில் வரவில்லை என்றும் அந்த நபர் கூறியுள்ளார். தான் 13 வயது முதலே கோடிங் செய்து வருவதாகவும், சைபர் பாதுகாப்பை கற்றுக்கொள்வதில் பல ஆண்டுகளை அர்ப்பணித்ததாகவும், தனது திறமையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

சட்டவிரோதம்

ஹேக்கிங் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் பரவத் தொடங்கிய அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட இணையதளத்தை கிளிக் செய்தபோது ஓபன் ஆகாமல், “502 Bad Gateway” என்ற பிழையை கண்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.

இந்தச் செயல் இணைய உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். நோக்கம் எதுவாக இருந்தாலும், இந்த ஊடுருவல் சட்டவிரோதமானது என்று சிலர் கண்டனம் தெரிவித்தனர். இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் எவ்வாறு அடையாளம் காணப்பட்டு மதிப்பிடப்படுகிறார்கள் என்பதில் உள்ள குறைபாடுகளை இது எடுத்துக்காட்டுவதாக சிலர் வாதிட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com