2 முறை இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட தமிழக வாலிபர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார்..!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து கோவை வாலிபர் ஒருவர் சண்டையிட்டு வருகிறார்.
2 முறை இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட தமிழக வாலிபர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார்..!
Published on

கோவை,

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து 13-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த சூழலில், பிற நாட்டை சேர்ந்தவர்களும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து போரிடலாம் என்று அந்நாட்டுத் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார். தற்போது 4-ம் ஆண்டு படித்து வரும் அவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை ராணுவ பிரிவில் இணைந்துள்ளது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறு வயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய சாய்நிகேஷ் ரவிசந்திரன், அதற்காக இந்திய ராணுவத்திற்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் அவர் சேர்க்கப்படவில்லை. அமெரிக்கத் தூதரகத்திலும் ராணுவ பணியில் சேர முயற்சித்து தோற்றுப் போனார். இந்நிலையில் உக்ரைனின் நடைபெறும் போர் காரணமாக அங்குள்ள துணை ராணுவ படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து உக்ரைன் துணை ராணுவத்தில் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் அந்த நாட்டுக்கு ஆதரவாகப் போர் புரிந்து வருகிறார். இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் நிலையில் சாய்நிகேஷ் மட்டும் அந்த நாட்டிற்கு ஆதரவாகப் போர் புரிந்து வருவது மத்திய,மாநில உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சாய்நிகேஷ் குறித்து விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள் கோவை துடியலூர் சுப்பிரமணியம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஏராளமான ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்துள்ளனர். பெற்றோருடன் தொடர்பில் இருக்கும் சாய்நிகேஷ் ரவிச்சந்திரன் ஊருக்கு வர விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com