தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு ராஜீவ் கொலை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க மத்திய அரசு மறுப்பு

ராஜீவ் கொலை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கக்கோரி தமிழக அரசு அனுப்பி வைத்த சிபாரிசு கடிதத்தை மத்திய அரசு நிராகரித்த விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியாகி இருக்கிறது.
தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு ராஜீவ் கொலை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க மத்திய அரசு மறுப்பு
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதைப்போல இந்த வழக்கில் ஏற்கனவே ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் ஆயுள் தண்டனை பெற்று இருந்தனர்.

சுமார் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்த 7 பேரையும் விடுவிக்க தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக கவர்னரே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, அவர்களை விடுவிக்குமாறு தமிழக அமைச்சரவையும் கவர்னருக்கு சிபாரிசு செய்தது. இந்த கடிதம் கவர்னரின் பரிசீலனையில் உள்ளது.

இதற்கிடையே நீண்டகாலமாக சிறையில் இருக்கும் 7 பேருக்கும் மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஜனாதிபதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த கடிதத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு பதிலளித்து இருந்தது.

அதில், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. எனினும் தமிழக அரசின் கடிதத்துக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

இதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மாளிகைக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு தகவல் ஆணையத்தில் இருந்து தற்போது பதில் அனுப்பப்பட்டு உள்ளது.

அதன்படி, ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு தமிழக அரசு எழுதிய கடிதம் எதுவும் தங்களுக்கு வரவில்லை என ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் சிபாரிசு கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் மறுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சக வட்டாரத்தில் விசாரித்த போது, தமிழக அரசின் கடிதம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகளே முடிவு எடுத்து, அதை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துவிட்டதாக தெரியவந்தது.

இந்த விவகாரம் ராஜீவ் கொலை கைதிகள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com