விருத்தாசலம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி விருத்தாசலம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் சக்தி நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, அந்தபள்ளியின் தாளாளரும், தி.மு.க. நகரமன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி பாலியல் தொல்லை செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பக்கிரிசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. மேலும் சிறுமி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அல்லாமல் சம்பவங்களை மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி சிறுமியின் உறவினர்கள் நேற்று அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமியின் உறவினர்கள், சிறுமிக்கு உரிய பாதுகாப்பு இல்லை. ஆனால் பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

மேலும் அடையாளம் தெரியாதவர்கள் எல்லாம் வந்து சிறுமியை படம் எடுத்து செல்கின்றனர். இதுவரை சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. எனவே சிறுமிக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு, சிகிச்சையும் முறையாக அளிக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் உாய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com