கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறை கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் நடைமுறை மீண்டும் தொடக்கம்: சிறைத்துறை டி.ஜி.பி

கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறை கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேசும் நடைமுறை 16-ந் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக சிறைத்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறை கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் நடைமுறை மீண்டும் தொடக்கம்: சிறைத்துறை டி.ஜி.பி
Published on

சிறை கைதிகள்

சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27.4.2021 முதல் சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் சிறைகளில் நேரில் சந்தித்து பேசும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதேவேளையில், செல்போனில் வீடியோ கால் எனப்படும் அழைப்பின் மூலம் சிறை கைதிகளை அவர் களது உறவினர்கள் வீடியோவில் பார்த்து பேசுவதற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.

மீண்டும் தொடக்கம்

இருந்தபோதிலும் சிறை கைதிகளை நேரில் சந்தித்து பேசும் நடைமுறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சிறை கைதிகளின் உறவினர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதாலும், சிறை கைதிகளின் நலனை கருத்தில் கொண்டும் சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து பேசும் நடைமுறை 16-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.இந்த சந்திப்பின் போது சில வழிமுறைகளை பின்பற்ற அனைத்து சிறை கண்காணிப்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

அதன்படி சிறை கைதிகளை சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள் அந்தந்த சிறைகளின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 24 மணி நேரத்துக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும். சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வர வேண்டும்.ஒரு சிறை கைதியை பார்க்க அதிகபட்சம் 2 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு சிறை கைதியை 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நேரில் சந்திக்க அனுமதிக்கப்படும்.சிறை கைதிகளை சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் அல்லது 3 நாட்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பதிவிறக்கம்

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். சிறை கைதிகளை சந்திக்க அனுமதி கோரும் விண்ணப்பம், உறுதிப்படிவம் ஆகியவற்றை www.prisons.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதுமட்டுமல்லாமல் சிறையில் பார்வையாளர்கள் அறையின் நுழைவுவாயிலிலும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com