வகுப்பறையை விட்டுவெளியே வந்த எல்.கே.ஜி. மாணவி காயம்: தனியார் பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

வேப்பந்தட்டை அருகே வகுப்பறையை விட்டுவெளியே வந்த எல்.கே.ஜி. மாணவி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவருடைய உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
வகுப்பறையை விட்டுவெளியே வந்த எல்.கே.ஜி. மாணவி காயம்: தனியார் பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
Published on

எல்.கே.ஜி. மாணவி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), விவசாயி. இவரது மகள் சஞ்சனா (3). மணிகண்டன் தனது மகளை அரும்பாவூர்-மேட்டூர் சாலையில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக்மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளார்.

நேற்று முன்தினம் பள்ளி நேரத்தில் வகுப்பிலிருந்து வெளியே வந்த சஞ்சனா அந்த பகுதியில் உள்ள தெருவில் அழுதுகொண்டு ஓடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்ததில் அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டது. சிறுமியின் அழுகுரல் கேட்ட அப்பகுதி மக்கள் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பள்ளி முற்றுகை

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டன் தனது மகளை தூக்கிக்கொண்டு அவரது உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகத்திடம் ``உங்களை நம்பி பள்ளியில் குழந்தைகளை சேர்த்து உள்ளோம். ஆனால் உங்களின் பாதுகாப்பு குறைபாடினால் குழந்தை வீதிக்கு வந்துள்ளது. மேலும், லேசான காயத்துடன் எனது மகள் உயிர் பிழைத்துள்ளார். அவளது உயிருக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன செய்வோம்.

எனது மகள் வகுப்பறையை விட்டு வெளியேறியது வகுப்பு ஆசிரியருக்கு தெரியவில்லை. பள்ளியை விட்டு வெளியேறியது பாதுகாவலருக்கும் தெரியவில்லை அந்த அளவுக்கு உங்கள் பள்ளியில் பாதுகாப்பு உள்ளது" எனக்கூறி மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

வேறு பள்ளியில்...

மேலும், உங்கள் பள்ளியில் எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே நாங்கள் கட்டிய தொகையை திருப்பி கொடுத்து விடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் எங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்கிறோம் என கூறினர். அப்போது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இனிமேல் இதுபோன்ற சம்பவம் நிகழாதவாறு பார்த்துக் கொள்கிறோம் என கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com