

சென்னை,
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் முந்தைய திமுக அரசு மற்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கைதாகி பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் ஆந்திராவில் இருந்த சவுக்கு சங்கரை தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, குண்டர் சட்ட வழக்குகளை ஆய்வு செய்யும் ஆலோசனைக்குழு, அளித்த அறிக்கையின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”தமிழ்நாடு மக்கள் அற்புதமான தீர்ப்பை வழங்கி உள்ளனர். இந்தத் தீர்ப்பை புரிந்து கொண்டு முதலமைச்சர் விஜய் தற்போது ஆட்சி புரிந்து வருவதை செய்தித்தாளில் படித்து தெரிந்து கொண்டேன். தமிழக வெற்றிக் கழகம் அமைத்துள்ள கூட்டணி ஆட்சி ஐந்தாண்டு காலம் முழுமையாக நிறைவு செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்பதே முதலமைச்சருக்கு நான் வைக்கும் கோரிக்கை.
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட ஆணையை விரைவாக வழங்க முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டதால்தான் விரைவாக விடுவிக்கப்பட்டேன். நாட்டில் என்ன நடந்தது என்பதை கடந்த 4 ஆண்டுகள் மக்கள் பார்த்ததால் மட்டுமே கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியை தழுவினார். தன்னுடைய ஊழியர்கள் மிகுந்த துன்பத்தை சந்தித்தனர். தனது தாயார் அகால மரணம் அடைந்தார். இவை அனைத்தையும் முதலமைச்சர் விஜய் பார்த்திருப்பார். சென்னையின் முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிந்து எடுப்பார்.
முதலமைச்சர் விஜய் நேரம் கொடுத்தால் அவரை சந்திக்க தயாராக இருக்கிறேன். திமுகவைப் போன்று கொடூரமான ஒரு கட்சி எந்த காலத்திலும் இருக்க முடியாது. ஊடகவியலாளர்களை சிறைவைத்த கொடுங்கோல் அரசு திமுகவை போல வேறு ஏதும் கிடையாது. முதலமைச்சர் விஜய் ஊடகங்களில் வரும் ஒவ்வொன்றையும் கவனித்து திட்டங்களை செய்து வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால் ஜனநாயகம் மேலும் அதிகமாக இருக்கும். கூட்டணிக் கட்சிகளே தவறுகளை சுட்டிக் காட்டுவார்கள். ஊடக சுதந்திரம் இருக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.