

சென்னை,
கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற யு.ஜி.சி. நெட்(தேசிய தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை மத்திய அரசின் சார்பில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது. இந்த நிலையில் 3-வது ஆண்டாக தற்போது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி யு.ஜி.சி. நெட் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 9-ந்தேதி வரை பதிவு செய்யலாம். விண்ணப்பத்தை பதிவு செய்தவர்களுக்கு ஹால் டிக்கெட் நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும். யு.ஜி.சி. நெட் தேர்வு டிசம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கி 6-ந்தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வெளியாகிறது.
அதேபோல், ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் நிதி உதவி பெறுவதற்கு அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழக(சி.எஸ்.ஐ.ஆர்.) யு.ஜி.சி. நெட் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கும் அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஹால்டிக்கெட் நவம்பர் 9-ந்தேதியும், தேர்வு டிசம்பர் 15-ந்தேதியும் நடக்கிறது. இந்த தேர்வு முடிவு டிசம்பர் 31-ந்தேதி வெளியிடப்படுகிறது.
இந்த தேர்வுகள் அனைத்தும் கம்ப்யூட்டரில் தான் நடக்கும்.
மேற்கண்ட தகவல் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.