கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறப்பு
Published on

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.

இந்த திட்டத்தின்படி ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும்.

பூண்டி ஏரியில் மதகு கிணறு அமைக்கும் பணிகள் மற்றும் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் ஜூலை மாதத்தில் கிருஷ்ணா நதி நீர் பெறவில்லை.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகமாகியது. ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகியது.

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி ஆகும். இதில் தற்போது 55 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 424 கன அடி வீதமும், பூண்டி ஏரிக்கு வினாடிக்க்கு 400 கன அடி வீதமும் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 32 அடியாக பதிவாகியது. இங்கு 2.241 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com