

சென்னை,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குடியரசுத் தலைவருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே காலத்தை கழிப்பதை உறுதி செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்து கொள்ளாது என்ற ஒரு எச்சரிக்கையாக குடியரசு தலைவரின் முடிவு அமைய வேண்டும். 7 பேர் விடுதலை குறித்து மத்திய-மாநில அரசுகள் எதிர்காலத்தில் பரிந்துரை அனுப்பினாலும் ஏற்கக் கூடாது என்று அதில் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.