பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
Published on

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டத்தில் முன்குறுவை சாகுபடி பாசனத்திற்காக பாபநாசம் அணை நேற்று திறக்கப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் பாசனத்தில் 2 ஆயிரத்து 260 ஏக்கர், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய் பாசனத்தில் 870 ஏக்கர், நதியுண்ணி கால்வாய் பாசனத்தில் 2 ஆயிரத்து 460 ஏக்கர், கன்னடியன் கால்வாய் பாசனத்தில் 12 ஆயிரத்து 500 ஏக்கர் என மொத்தம் 18 ஆயிரத்து 90 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பயன் பெறுகின்றன. சுமார் 35 குளங்கள் மூலம் மறைமுக பாசன நிலங்கள் பயன்பெறுகிறது.

அதாவது நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி, அம்பை தாலுகா பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முன்குறுவை சாகுபடி பாசனத்திற்காக நேற்று பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை மொத்தம் 105 நாட்களுக்கு தேவைக்கு தகுந்தாற்போல் தண்ணீர் திறந்துவிடப்படும்.

நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 472.73 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 83.40 அடியாக இருந்தது. பாபநாசம் அணையில் 3 மி.மீட்டரும், சேர்வலாறு அணையில் 10 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

அணையை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு தாமிரபரணி நதிக்கு மலர் தூவி வரவேற்றார். பின்னர் அவர் கூறுகையில், "விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் விவசாய கடன் வட்டியில்லாமல் வழங்கப்படும். கடன் பெறுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜ், பேச்சிமுத்து, பாபநாசம் கீழ்அணை மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாச்சலம், அம்பை தாசில்தார் சுமாதி, அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், விக்கிரமசிங்கபுரம் நகர தி.மு.க. செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com