தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு; நேற்று ரூ.243 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு; நேற்று ரூ.243 கோடிக்கு மது விற்பனை
Published on

சென்னை,

நாட்டில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று ஊரடங்கு. ஊரடங்கு அமல்படுத்துவதால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் கூடுவது தவிர்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 1ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

அதேபோல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இன்றைய தினம் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை. பொதுமக்கள் தங்களது அத்தயாவசிய தேவைக்காக செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகளும் மூடப்பட்டு இருக்கும். இதனால் தேவையான அளவுக்கு மதுப்பிரியர்கள் நேற்றே மதுபானங்களை வாங்கி சென்றனர். நேற்று ஒரேநாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இவற்றில் மற்ற மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி விட்டு சென்னை முதல் இடம் பிடித்து உள்ளது. சென்னையில் ரூ.52.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து திருச்சி-ரூ.48.26 கோடி, மதுரை - ரூ.49.75 கோடி, சேலம் - ரூ.47.38 கோடி மற்றும் கோவை - ரூ.45.23 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com