டோக்கன் பெற முடியாதவர்களுக்கும் ஒரு வாரத்தில் நிவாரண நிதி - உதயநிதி ஸ்டாலின்

ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளும், தொழில் நிறுவனங்களும் வெள்ளத்தில் மிதந்தன.

'மிக்ஜம்' புயல், மழையால், சென்னை மாவட்டம் முழுவதுமாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களும் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக ரூ.1,455 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. வெள்ள நிவாரணம் பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வீடு வீடாக சென்று கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் டோக்கன் வழங்கப்பட்டது.

சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் உள்ள ரேஷன் கடையில் ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில் டோக்கன் பெற முடியாதவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டோக்கன் பெறாதவர்களுக்கு உதவுவதற்காக ரேஷன் கடைக்கு அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் உதவி மையங்களில் விண்ணப்பம் அளித்தால் ஒரு வாரத்தில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com