

நெல்லை:
நெல்லை மாவட்ட மிலாது கமிட்டி சார்பில் நேற்று மிலாது நபி விழா மேலப்பாளையத்தில் நடைபெற்றது. இதையொட்டி மேலப்பாளையம் பஜார் திடலில் இஸ்லாமிய புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. உசேன் தங்கள் ஜலாலில் புகாரி திறந்து வைத்தார். பின்னர் பாரம்பரிய சிலம்பாட்ட நிகழ்ச்சி நடந்தது.
மாலை 4.30 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ்.டி.பள்ளிவாசல் அருகில் இருந்து மிலாது நபி சமய நல்லிணக்க ஊர்வலம் தொடங்கியது. பஷீர்அகமது பிலாலி தலைமை தாங்கினார். மேலப்பாளையம் அனைத்து சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசல் கூட்டமைப்பு பொருளாளர் முகமது இஸ்மாயில் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் மேலப்பாளையம் பஜார் திடலில் நிறைவடைந்தது.
தொடர்ந்து மிலாது நபி எழுத்து தேர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்துல் காதர் தலைமை தாங்கினார். மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் வாழ்த்தி பேசினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இரவில் உத்தம திருநபி உதய தின விழா சொற்பொழிவு நடந்தது. இதில் நெல்லை மாவட்ட மிலாது கமிட்டி அமைப்பாளர் அமானுல்லா, பேராசிரியர் முகம்மது சிராஜூதீன் பிலாலி, நாகூர் ஜாமியா மஸ்ஜித் செய்து பள்ளி இமாம் அகமது முஹ்யித்தீன் சமதானி ஆகியோர் பேசினார்கள்.