திருவண்ணாமலை தீபமலையில் அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறை அகற்றம்


திருவண்ணாமலை தீபமலையில் அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறை அகற்றம்
x

பாறைகள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு டிராக்டர் மூலமாக கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை,

பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் உள்ள திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒரு வீட்டில் இருந்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண், பாறைகளில் சிக்கி மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் மலையில் இருந்து உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று அபாயகரமான நிலையில் குடியிருப்பு பகுதியின் அருகில் நின்றது. இந்தப் பாறையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் திருச்சியில் இருந்து பாறை உடைக்கும் வல்லுனர்கள் குழுவினர் திருவண்ணாமலைக்கு கடந்த 22-ந் தேதி வந்து அபாயகரமான நிலையில் நிற்கும் ராட்சத பாறை மட்டுமின்றி மண் சரிவின் போது வ.உ.சி. நகர் பகுதியில் மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகளையும் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறையும் தற்போது முழுமையாக தகர்க்கப்பட்டது. பிரேக்கர் இயந்திரம் மூலம் பாறைகள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு டிராக்டர் மூலமாக கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story