

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பொது இடங்களில் இந்து அமைப்பினர், சுமார் 3 அடி முதல் 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். இவ்வாறு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும், விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து 3, 5, 7-வது நாட்களில் வாகனங்கள் மூலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ளது.
அதன்படி விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று (புதன்கிழமை) விழுப்புரத்தில் நடக்கிறது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், வாகனங்களில் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக எம்.ஜி.சாலை, காமராஜர் வீதி, சென்னை நெடுஞ்சாலை, வடக்கு தெரு, திரு.வி.க. வீதி, காந்தி சிலை வழியாக கடலூர் தேவனாம்பட்டினம் கொண்டு சென்று கடலில் கரைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஊர்வலம் தடையின்றி செல்லும் வகையில் நேற்று விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் விழுப்புரத்தில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதாவது சென்னை நெடுஞ்சாலை, வடக்குத்தெரு, திரு.வி.க. வீதி உள்ளிட்ட வழிப்பாதைகளில் கிடந்த ஜல்லிக்கற்கள், செங்கற்கள் ஆகியவற்றை போலீசார் அகற்றி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தினா.. அதோடு சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அதிரடியாக அகற்றினர்.