தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றம்


தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றம்
x

இது தொடர்பாக கடந்த 5-ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் கடந்த 1915-ம் ஆண்டு ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

பயணிகளுக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர், குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, ரெயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்த டிஜிட்டல் திரைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கிடையில் ரெயில் நிலைய முகப்பு பகுதியில் பொள்ளாச்சி சந்திப்பு என்ற பெயர் பலகை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளில் வைக்கப்பட்டு இருந்தது.

இதில் தமிழில் வைக்கப்பட்ட பெயர் பலகை 'பொள்ளாச்சி ஜ்' என்று தவறாக இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அந்த பெயர் பலகையை திருத்தி சரியாக வைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். மேலும் இது தொடர்பாக கடந்த 5-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து ெரயில் நிலையத்தில் தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை நேற்று அகற்றப்பட்டது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பொள்ளாச்சி ரெயில் நிலையம் பாலக்காடு கோட்டத்தில் உள்ளது. இதனால் பொள்ளாச்சி-கோவை வழித்தடம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போது மும்மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டும், அதில் தமிழில் மட்டும் தவறாக வைக்கப்பட்டு இருந்தது.

எதிர்ப்பை தொடர்ந்து தற்போது அந்த பெயர் பலகையை அதிகாரிகள் அகற்றி உள்ளனர். பொள்ளாச்சி சந்திப்பு என்று தமிழில் எந்தவித தவறும் இல்லாமல் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் தவறாக இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து அந்த பெயர் பலகை அகற்றப்பட்டு உள்ளது. மீண்டும் எந்தவித பிழையும் இல்லாமல் பெயர் பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

1 More update

Next Story