

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாகரல் கிராம ஊராட்சியில் பஸ் பயணிகள் நிழற்குடை அருகே ரேஷன்கடை இயங்கி வருகிறது. இங்கு, 680 ரேஷன்கார்டுதாரர்கள் அரசு மானிய விலையில் வழங்கும், அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதன் அருகில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய கட்டப்பட்டுள்ளது.
அந்த தொட்டி சேதமடைந்ததால், மற்றொரு தொட்டி அதன் அருகிலேயே கட்டியுள்ளனர். அதேபோல், அந்த பகுதியிலேயே, பழைய ரேஷன்கடை கட்டிடம், அரசு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், பஸ் பயணியர் நிழற்குடை உள்ளிட்டவை சேதம் அடைந்தும், பொதுமக்கள் பயன்பாடு இல்லாமலும் உள்ளது.
இதனால் பொதுமக்கள் அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிமகன்கள் மது குடிக்கும் இடமாகவும் தற்போது மாறிவருகின்றது. எனவே, மாகரல் கிராமத்தில் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்துள்ள அரசு கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று கிராம பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.