ஒட்டியம்பாக்கத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்

ஒட்டியம்பாக்கத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் கலெக்டருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.
ஒட்டியம்பாக்கத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்
Published on

சென்னை,

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் ஒட்டியம்பாக்கம் கலங்கல் ஓடையைத் தடுத்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காரணை, மாம்பாக்கம், ஒட்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்வது தடைபட்டுள்ளது, பல பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படுகிறது என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை தாமாக முன்வந்து வழக்காக எடுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், நீரோடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து செங்கல்பட்டு கலெக்டர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்ஜினீயர் ஆகியோர் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நீரோடை ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைத்து 9 மாதங்கள் ஆகிவிட்டன. இருந்தபோதிலும் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதால் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இந்தக் குழு தாக்கல் செய்யும் அறிக்கையில் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் மட்டுமல்லாது, நீரோடை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான விவரங்களும் இடம்பெற வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 31-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அப்போது அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் குழு உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com