

மதுரை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை மிக தீவிரமாக இருக்கிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா நோய் பாதிப்பு அதிகம் உள்ள நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது.
சென்னையில் பாதிப்புடன் உயிரிழப்பு அதிகமானதை தொடர்ந்து கீழப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. மதுரையிலும் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த 8-ந்தேதி தொடங்கப்பட்டது. முதல் நாளில் பெரும்பாலானோர் ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஆர்வம் காட்டாமல் இருந்தனர். ஆனால், மறுநாளில் மருந்து வாங்க ஏராளமானோர் திரண்டனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதலே மருத்துவ கல்லூரி அருகே கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர். அவர்களில் 83 பேருக்கு மட்டுமே நேற்று மருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், மதுரை மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க 3 வது நாளாக இன்றும் 500க்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று 79 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்க நேற்று டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே மருந்து வாங்க முடியும் என்ற நிலையில் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே டோக்கன் பெறதாவர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாளை மருந்து பெறுவதற்கான டோக்கன் மதியம் 2 மணிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.