திருத்தணி பேருந்து நிலைய பெயர் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அண்ணா பெயரை மாற்றி, கருணாநிதி பெயர் வைப்பதா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
திருத்தணி பேருந்து நிலைய பெயர் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Published on

சென்னை,

திருத்தணி புதிய பேருந்து நிலையத்துக்கு 'கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

தி.மு.க. என்றாலே விஞ்ஞான ஊழல், குடும்ப மற்றும் வாரிசு அரசியல் மட்டுமே மக்களுக்கு ஞாபகம் வரும். இந்த உண்மையை மறைப்பதற்காக, கண்ணில் கண்ட இடங்களுக்கெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதியின் பெயரை சூட்டி, அவரது புகழ் பாடுவதை மட்டுமே வாடிக்கையாக செய்து வருகிறார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு, இந்த ஆட்சியில் முடிவடைந்த திட்டங்களுக்கெல்லாம் திமுக அரசு செய்ததுபோல் ஸ்டிக்கர் ஒட்டுவதை வாடிக்கையாகக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு, தற்போது திருத்தணியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கு துணிந்திருக்கிறது.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஏற்கெனவே 'அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்' பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்றுவரை இயங்கி வருகிறது. இதையொட்டி புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டாமல், 'கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்' என்று பெயர் சூட்டியிருப்பது, விடியா திமுக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் பெயரை புறக்கணிப்பு செய்வது, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் இழைக்கப்படும் அநீதி. பேரறிஞர் அண்ணாவின் பெயர் மறைக்கப்பட்டு, ஸ்டாலினின் தந்தை கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதை அறிந்து பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். பேரறிஞர் அண்ணாவின் பெயரை மறைப்பதுதான் திராவிட மாடலா..?

தந்தையின் பெயருக்கு விளம்பரம் செய்யவேண்டுமானால், திமுக-வின் அறக்கட்டளையில் இருந்து செய்ய வேண்டுமே தவிர, ஏற்கெனவே பேரறிஞர் அண்ணா பெயரில் இயங்கிவரும் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது. கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதால் அண்ணா பெயருக்கு அவமதிப்பு ஏற்படுவதுடன், தேவையற்ற சர்ச்சையையும், பிரிவினையையும் உருவாக்கும். எனவே, இந்தப் பெயர் மாற்ற அரசியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

அதேபோல், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகளான கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்ற பல பணிகள் நிறைவடையாத நிலையில், தேர்தலை முன்னிட்டு அவசரமாக திறப்பு விழா நடத்தத் துடிப்பது, திமுக-வின் விளம்பர மோகத்தையும், அரசியல் ஆதாயத்தையுமே காட்டுகிறது.

மக்களுக்கு நீண்ட நாள் பயனளிக்க வேண்டிய பேருந்து நிலையத்தில் கட்டுமானத்தின் தரம், பாதுகாப்பு, கழிவுநீர் வசதிகள், பயணிகள் அமர்வு வசதிகள், போக்குவரத்து வழிகள் போன்றவை இன்னமும் ஆய்வு செய்யப்படவே இல்லை. இவையெல்லாம் முடிவதற்கு குறைந்தது ஒருமாத காலம் தேவைப்படும் நிலையில், தேர்தலை மனதில் நிறுத்தி அவசர, அவசரமாக 4.3.2026 அன்றே திறப்பு விழா நடத்த இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இனி, மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு, இப்படி தப்பும் தவறுமாக விளம்பர மோகத்தில், பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதையும்; போதிய வசதிகளை ஏற்படுத்தாமல் அவசர கதியில் திறப்பு விழா நடத்துவதையும் விடியா திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com