

திருப்பூர்,
திருப்பூர் கோவில்வழியில் தியாகி திருப்பூர் குமரன் தெற்கு பஸ் நிலையம் ரூ.26 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இங்கிருந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் 35 கடைகள் உள்ளன. இதில் பல கடைகள் ஏலம் போகாமல் பூட்டியே கிடக்கிறது.
சமீபத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு பஸ் நிலையத்தில் மதுரை, சிவகங்கை, ராமேஸ்வரம் பஸ்கள் நிறுத்தும் பகுதிகள், அதுபோல் தேனி, நாகர்கோவில், திண்டுக்கல் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் இருந்த மேற்கூரை பறந்தன. இதனால் மேற்கூரை இல்லாமல் வெறும் கம்பிகளாக காட்சியளித்தன.
இந்த மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன்எதிரொலியாக பஸ் நிலையத்தில் சூறைக்காற்றுக்கு சேதமாகி இரும்பு கம்பிகளாக காட்சியளித்த மேற்கூரையை சீரமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. மேற்கூரை பகுதியில் ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிலையத்தின் உள்ளே 2 இடங்களில் உள்ள இலவச மற்றும் கட்டண கழிப்பிடங்கள் பூட்டியே கிடக்கிறது. அதையும் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.