

சென்னை,
சென்னையின் முக்கிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
அதன்படி, ரெயில் நிலைய வளாகத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி, பார்சல் அலுவலகம், நுழைவுவாயில், ரெயில்வே ஊழி யர்கள் அறை உள்பட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதேபோல, எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 50 சதவீதத்திற்கு மேல் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதற்கிடையே, எழும்பூர் ரெயில் நிலைய மின்சார ரெயில் நடைமேடை 10, 11-ல் கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ந் தேதி முதல் மறுசீரமைப்பு பணி தொடங்கி மும்முரமாக நடைபெறுகிறது. வருகிற ஏப்ரல் 5-ந் தேதிக்குள் மின்சார ரெயில் இயக்கும் வகையில் அனைத்து பணிகளை முடித்து ரெயில்களை இயக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.