கோட்டூரில், குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

இதுகுறித்த செய்தி நேற்று முன்தினம் ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் வெளியானது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சன்னதி தெரு, ஜீவா தெரு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் செல்லும் குழாயில் யூனியன் அலுவலகம் எதிரில் மெயின் ரோட்டில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருந்தது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என அந்த பகுதி பொதுமக்கள் கூறினர். மேலும் கோடை காலத்தில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாக நேரிடுமோ? என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியை நேரில் பார்வையிட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுத்து, தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்த செய்தி நேற்று முன்தினம் 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று பொக்லின் எந்திரம் மூலம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதையடுத்து நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.






