குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

இதுகுறித்து தினத்தந்தியில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.
கோவை,
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து குடிநீருக்கும், பாசனத்திற்கும் ஆழியாற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆழியாற்றில் இருந்து கோவை குறிச்சி- குனியமுத்தூர் உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. அம்பராம்பாளையத்தில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் ராட்சத குழாய்கள் மூலம் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும் ஆச்சிப்பட்டி, கிணத்துக்கடவில் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிக்கு ஆச்சிப்பட்டியில் குழி தோண்டியபோது குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாகி வந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் குழாய் சீரமைப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை குறிச்சி, குனியமுத்தூர் குடிநீர் திட்டத்தில் பதிக்கப்பட்ட பிரதான குழாய்கள் ஆச்சிப்பட்டி வழியாக செல்கிறது. பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணியின்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் மற்ற இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த பணியின் காரணமாக 2 நாட்கள் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். குடிநீர் குழாய்கள் உள்ள பகுதிகளில் சாலை பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோடை காலம் என்பதால் குழாய் உடைப்பு ஏற்பட்டு உள்ள பகுதிகளை கண்டறிந்து உடனடியாக சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






