ஏற்காடு படகு இல்லத்தில் தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் சீரமைப்பு

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் படகு இல்ல சாலையில் இருந்து மான் பூங்காவின் உள்புறத்தை இணைக்கும் உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் இருந்த கம்பிகள் சரிந்து ஏரியின் நடுப்புறம் தாழ்வாக தொங்கியது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.
தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஏற்காடு படகு இல்லத்தில் தாழ்வாக தொங்கிய மின் கம்பிகளை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி மின்வாரிய ஊழியர்கள் நேற்று தாழ்வாக தொங்கிய மின்கம்பிகளை சீரமைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க உதவிய ‘தினத்தந்தி' நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.






