திருஉத்தரகோசமங்கை கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

திருஉத்தரகோசமங்கை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு மற்றும் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருஉத்தரகோசமங்கை கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
Published on

திருஉத்தரகோசமங்கை கோவிலில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு மற்றும் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருஉத்தரகோசமங்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாதர் கோவில் உள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஆண்டு முழுவதும் இந்த சிலையின் மீது சந்தன கவசம் பூசப்பட்டு வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் களைந்து பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

இந்த மங்களநாதர் கோவில் சுவாமி சன்னதி முதல் பிரகாரம் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்தது. குறிப்பாக சுவாமி சன்னதி பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும், வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் பெரும்பாலான தூண்கள் மற்றும் மேல் தளங்களில் கற்கள் இல்லாமலும் முழுமை பெறாமலேயே காட்சி அளித்து வந்தது.

சீரமைப்பு பணிகள்

இந்தநிலையில் சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் நன்கொடை மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் நிதியில் திருப்பணிகள் நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவடைந்தன. தற்போது மங்களநாயகி அம்பாள் சன்னதி உள்பிரகாரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் சேதமடையாமல் அதன் தன்மை குறையாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்டவைகளை கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சீரமைப்பு பணிக்காக தேவைப்படும் மணல் தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகம்

இதற்காக கிழக்கு ராஜகோபுரம், அம்மன் சன்னதி கோபுரம், நடராஜர் சன்னதி கோபுரம், ராஜ கோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நந்தி மண்டப பிரகாரம் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

திருஉத்தரகோசமங்கை கோவிலின் மராமத்து மற்றும் சீரமைப்பு பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து வரும் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com