

சென்னை,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, 'எக்ஸ்' சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
சுமார் 250 முதல் 400 பள்ளி மாணவர்களுக்கு, ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்பதாக மாற்றி, கடந்த 2-ந்தேதி தி.மு.க. அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு புதிய நியமனங்கள் செய்வதை குறைக்கும் நோக்கத்தில், இந்த அரசாணை பிறப்பித்திருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் வெளியான, தி.மு.க. அரசின் புதிய கல்விக் கொள்கையில், 'பள்ளிகளில் உடற்கல்வியையும், விளையாட்டுத் திறனையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. அரசியல் நாடகத்துக்காக, தமிழ்நாடு கல்விக் கொள்கைக் குழு என்ற பெயரில் தி.மு.க. அமைத்த குழுவின் அறிக்கையை, முதல்-அமைச்சரோ மற்ற அமைச்சர்களோ ஒருவர் கூடப் படித்துப் பார்க்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
புதிய அரசாணை மூலம், அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பு, இந்த அரசாணையால் பறிபோயிருக்கிறது. மேலும், பெருகி வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்திலிருந்து மாணவர்களை ஓரளவுக்கு காப்பாற்றி வருவது, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள்தான். கஞ்சா விற்பனைக்குத் தடையாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களை தடுப்பதற்காகவே, இது போன்ற வினோதமான அரசாணையை, தி.மு.க. அரசு பிறப்பித்திருப்பதாக எண்ண வேண்டியுள்ளது.
உடனடியாக, தி.மு.க. அரசு ஜூலை 2-ந்தேதி தேதியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். முன்பு போலவே 250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதத்தையே தொடர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.