அரசு ஆஸ்பத்திரிகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஆபத்தானது டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விடலாம் என்ற நிதி ஆயோக் பரிந்துரை ஆபத்தானது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அரசு ஆஸ்பத்திரிகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஆபத்தானது டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
Published on

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆபத்தானது

ஆஸ்பத்திரிகளை நடத்துவதில் அரசின் சுமையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விடலாம் என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது. நிதி ஆயோக்கின் இந்த யோசனை ஆபத்தானது.

மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு உருவாக்கப்பட்ட அமைப்பான நிதி ஆயோக், அரசு மாவட்ட ஆஸ்பத்திரிகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைத்தல் என்ற தலைப்பில் தயாரித்து வெளியிட்டுள்ள 250 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் அரசு ஆஸ்பத்திரிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை நிறைவேற்றும் அளவுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் போதிய நிதி உள்ளிட்ட ஆதாரங்கள் இல்லை என்றும், அத்தகைய சூழலில் அரசு ஆஸ்பத்திரிகளை தனியாரிடம் ஒப்படைத்து, அவற்றை அடிப்படையாக வைத்து மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தனியாரை அனுமதிக்கலாம் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது. தனியாருக்கு சாதகமாகவே இந்த பரிந்துரையை நிதி ஆயோக் வழங்கியுள்ளது.

நிராகரிக்க வேண்டும்

அனைத்து வசதிகளுடனும் இயங்கி வரும் மாவட்ட ஆஸ்பத்திரிகளை தனியாரிடம் ஒப்படைப்பது வரி செலுத்திய மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம். கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மருத்துவமும் இலவசமாக கிடைக்காது; மருத்துவக் கல்வியும் நியாயமான கட்டணத்தில் கிடைக்காது.

எனவே, தனியாருக்கு மட்டும் பயனளிக்கக்கூடிய நிதி ஆயோக்கின் யோசனையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். மாறாக, மாவட்ட ஆஸ்பத்திரிகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து அரசு மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும்; விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com